×

பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்களுக்கு வழங்கவே பாஜக-வினர் நியமனம்!: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு..!!

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் தனி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்புடையவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடிக்கவே கட்சி சார்புடையவர்கள் நியமிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013ன் படி ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்திலும் மொத்த இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காவது தனி இயக்குநர்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இருக்காது.

நிறுவனங்களின் அன்றாட செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் கொள்கை வகுத்தல் மற்றும் திட்டமிடல் சார்ந்து முடிவெடுப்பார்கள்.
இப்படி அவர்கள் நியமிக்கப்படுவதற்கு தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே காரணமாகும். இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தனி இயக்குநர்கள் குறித்து தகவல் உரிமை சட்டம் மற்றும் நேரடி விசாரணை மூலம் பெறப்பட்டுள்ள தகவல்களை ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள 98 பொதுத்துறை நிறுவனங்களில் 172 தனி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 67 பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 86 தனி இயக்குநர்கள், பாஜக-வுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் ஏ.ஆர்.மஹாலட்சுமி, லட்சுமி சுரேஷ், ஆர்.கல்யாணசுந்தரம், முன்னாள் ராணுவ வீரர் பி.பி. பாண்டியன், சத்தியநாராயணன், வேல்பாண்டியன், பி.சரவணன், என்.ராஜலட்சுமி, அசிம் பாஷா, கே.ராமலிங்கம் ஆகியோர் தமிழ்நாடு பாஜக-வுடனும், துரை கணேசன், அருள் முருகன் ஆகியோர் புதுச்சேரி பாஜகவில் துணை தலைவர்களாக பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடித்து பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்க உதவுவதற்காகவே பாஜக-வினர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஆட்சியை விட அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

Tags : BJP ,Sitaram Yechury , PSU, robbery, corporate, BJP, Sitaram Yechury
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...