பள்ளி மாணவிகளிடம் ஆபாச வீடியோ சாட் : சாமியார் சிவசங்கர் பாபாவின் ஈமெயில் கணக்கு அதிரடியாக முடக்கம்!!

சென்னை : பள்ளி மாணவிகளிடம் பேசிய ஆபாச சாட் ஆதாரங்கள் கிடைத்ததால் சாமியார் சிவசங்கர் பாபாவின் யாஹூ ஈமெயில் கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டது. 2 நாட்களிலேயே தேவையான ஆதாரங்கள் கிடைத்ததால் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். சாமியார் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த திங்கட்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது பாலியல் விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்றனர்.அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பள்ளி வளாகத்தில் இருந்து லேப்டாப்கள்,சிடிக்கள், பெண் டிரைவ், பிளாப்பி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் யாஹூ ஈமெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச வீடியோ சாட்கள் சிக்கியது.

 தமது அறையில் இருந்து கொண்டு மாணவர் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும் சிக்கியுள்ளது.இதையடுத்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த யாஹூ ஈமெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். விசாரணையில் பாலியல் செயல்களில் ஈடுபட்டதை சிவசங்கர் பாபா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் தேவையான ஆதாரங்களை 2 நாட்களிலேயே திரட்டியதால் நேற்று இரவு மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிவசங்கர் பாபா மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஒரு வழக்கில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 வழக்குகளிலும் சிபிசிஐடி போலீசார் விரைவில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய உள்ளனர்.

Related Stories: