×

நடிகை கொடுத்த பாலியல் வழக்கில் கைதானவர்: சைதை சிறையில் ஏர்கூலர், சோபா வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை

* புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றம்
* உதவிய சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

சென்னை: நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி(36) கொடுத்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சைதா ப்பேட்டை சிறையில் அடைக்கப் பட்டார்.  இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவரது அறையில் ஏசி, சோபா, செல்போன், சொகுசு மெத்தை உள்ளிட்டவை பயன்படுத்தி வருவதாக சிறைத்துறையின் உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறைத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருந்த அறையில் சிறை விதிகளுக்கு முரணாக ஏசி, சோபா, மெத்தை, செல்போன் சார்ஜர் உடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. உடனே விஜிலன்ஸ் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், மணிகண்டன் அதிரடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மணிகண்டன் சிறையில் சொகுசாக இருப்பதற்கு லட்சம் ரூபாய் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் அறையில் யார் உத்தரவுப்படி ஏசி, சோபா வழங்கப்பட்டது குறித்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு பிறகு மணிகண்டனுக்கு உதவிய சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதை போலவே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் சொகுசாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் காவலுக்கு மறுப்பு
சிறையில் உள்ள மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ளவும், ஆதாரங்களை கைப்பற்றவும் விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, போலீஸ் தரப்பில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, மணிகண்டன் தரப்பில் போலீஸ் காவல் தரக்கூடாது என்று வாதிட்டார். அரசுதரப்பில் வாதிடுகையில், அவரிடம் இருந்து போட்டோ, வீடியோ வைத்துள்ள லேப்டாப் போன்றவற்றை கைப்பற்ற வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனாம்பாள், போலீஸ் காவல் தர மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

அமைச்சர் ரகுபதி விளக்கம்
அறந்தாங்கியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அளித்த பேட்டி: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஏசி வசதியுடன் இருப்பதாக வந்துள்ள செய்தி தவறானது. உண்மைக்கு புறம்பான செய்தி. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 3 தினங்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு சிறையில் ஏ கிளாஸ் கேட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனவே சட்டப்படி யாருக்கு என்ன சலுகைகள் கொடுக்க முடியுமோ, அதுதான் கொடுக்கப்படும். விதிகளுக்கு முரணாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றார்.

Tags : Manikandan ,Saitai , Manikandan arrested for sexually assaulting actress
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...