×

தூய்மை திருவள்ளூர் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: தூய்மை திருவள்ளூர் திட்டம், மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி முகாம் ஆகியவற்றை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தூய்மை திருவள்ளூர் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும், மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை துவக்கி வைத்து, நிவாரணப் பொருட்களை வழங்கினர். பின்னர், அமைச்சர் சா.மு.நாசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.தூய்மை திருவள்ளூர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

சாலை ஒரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையிலும் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகள், 526 ஊராட்சிகளில், முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் தூய்மை திருவள்ளூர் வாரமாக வரும் ஜூலை 4ம் தேதி வரை குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 3 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 20 வாகனங்களில் 260 பணியாளர்களை கொண்டு தினமும் 7 வார்டுகள் வீதம் 7 நாட்களில் அனைத்து 48 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் கையுறைகள், முககவசங்கள் உள்பட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

4  நகராட்சிகளில் உள்ள 87 வார்டுகளில், 3 இயந்திரங்கள், 4 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 11 மினிலாரிகள், 31 மின்கல வாகனங்களில் 312 பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றவும், 10 பேரூராட்சிகளில் உள்ள 165 வார்டுகளில் குப்பைகள் அதிகம் சேரும் 315 தெருப்பகுதிகள் கண்டறியப்பட்டு 5 இயந்திரம், 2 லாரிகள், 12 டிராக்டர்கள், 11 மினிலாரிகள், 8 காம்பேக்டர்கள், 20 மின்கல வாகனங்களில் 870  பணியாளர்களை கொண்டு  குப்பைகளை அகற்றவும், ஊரக பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் குப்பைகள் அதிகமாக உள்ள 31 வழிதடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பணிக்காக, 17 இயந்திரம், 58 டிராக்டர்கள், 534 பணியாளர்களை கொண்டு குப்பைகளை பாதுகாப்பாக அகற்றவும்,

526 ஊராட்சிகளில் 2165 தூய்மை பணியாளர்களைக் கொண்டு வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்தல், குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இணைந்து “ஒன்றிணைவோம் சுகாதாரத்தை காப்போம்”, என்ற கூற்றின் அடிப்படையில் தூய்மையான திருவள்ளுர் மாவட்டத்தை உருவாக்குவோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், நரிகுறவர் வயது முதிர்ந்தோர், செங்கல்சூளையில் பணிபுரிபவபர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் முகாம் அமைத்து, கோவிட் தடுப்பூசி வழங்கும் நடைமுறை நடந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 426 திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 1500 மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் எம்பி கே.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ட்டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சந்திரன், க.கணபதி, ஜோசப் சாமுவேல், துரை சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvallur ,Camp ,Gender ,Minister ,S.M.Nasser. , Purity Tiruvallur Project Vaccination Camp for Third Gender: Inaugurated by Minister S.M.Nasser
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்