கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா அபார வெற்றி

ரியோ டி ஜெனிரோ: தென்  அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான  கோபா கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில், அர்ஜென்டினா அணி தனது கடைசி லீஜ் ஆட்டத்தில் பொலிவியா அணியை எளிதாக வீழ்த்தியது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே கால் இறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியிருந்த பொலிவியா ஆறுதல் வெற்றிக்காக வேகம் காட்டியது. ஆனால், அதை எளிதாக சமாளித்த அர்ஜென்டினா அணிக்கு கோம்ஸ் 6வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை கொடுத்தார்.   அர்ஜென்டினா அணிக்காக தனது 148வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி  வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து, 42 நிமிடத்தில் அவர் பீல்டு கோல் அடித்து அமர்க்களப்படுத்த, இடைவேளையின்போது அர்ஜென்டினா 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பொலிவியாவின்  சாவேத்ரா 60வது நிமிடத்தில் கோல்  அடித்தார். அதற்கு பதிலடியாக அர்ஜென்டினாவின் மார்டினெஸ் 65வது  நிமிடத்தில் கோலடித்தார். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.  உருகுவே வெற்றி: மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில்  உருகுவே - பராகுவே  அணிகள் மோதின. இரு அணிகளுமே காலிறுதி  வாய்ப்பை பெற்று விட்ட நிலையில், இது  சம்பிரதாய ஆட்டமாக இருந்தது. உருகுவே வீரர் எடின்சன் காவனி 21வது நிமிடத்தில்  அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை  கோலாக்கினார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாத நிலையில், உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது.

ஏ பிரிவில் அர்ஜென்டினா (10 புள்ளி),  உருகுவே (7),  பராகுவே (6), சிலி (5) அணிகள் முதல் 4  இடங்களை பிடிக்க, பொலிவியா (0) பரிதாபமாக வெளியேறியது. பி பிரிவில் பிரசேில், பெரு, கொலம்பியா,   ஈக்வடார் அணிகள் முதல் 4 இடங்களை கைப்பற்றின. இந்த அணிகள்  ஜூலை 2, 3 தேதிகளில்  காலிறுதி ஆட்டங்களில் மோத உள்ளன.  இந்திய நேரப்படி  ஜூலை 3, 4 தேதிகளில் அதிகாலையில் நடக்கின்றன. காலிறுதியில் பெரு-பராகுவே, பிரசேில்-சிலி,  உருகுவே-கொலம்பியா, அர்ஜென்டினா - ஈக்வடார்  அணிகள் களம் காணுகின்றன.

Related Stories:

>