நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வழக்கு விவசாயிகளின் மனுக்கள் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: முந்தையை அதிமுக அரசு கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டம்- 2019-ஐ எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, ‘நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு,’ என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இதற்கு மாற்றாக, 2015ம் ஆண்டு அன்றைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து,105 (ஏ) சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த அதிமுக அரசு, நில ஆர்ஜித சட்டம் -2019 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்து மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியது. இதை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த விவசாயிகள் சொக்கப்பன் உள்ளிட்ட 55 பேர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கில் நீதிபதிஏ.எம்.கன்வீல்கர் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில்,  தமிழக அரசின் சட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சொக்கப்பன் உட்பட 55 விவசாயிகள் தொடர்ந்த அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Related Stories: