47 பேருக்கு கொரோனா உறுதியானதால் தனியார் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது. இதில், 76 குழந்தைகள் தங்கி படிக்கின்றனர். கடந்த 26ம் தேதி காப்பகத்தில் உள்ள 4 சிறுமிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது, 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், காப்பகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 4 சிறுமிகளுக்கு, மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, காப்பகத்தில் மீதமுள்ள குழந்தைகளுக்கு  கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. இதில்  13 சிறுவர்கள், 23 சிறுமிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 43 பேருக்கு தொற்று உறுதியானது.

உடனே மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட 43 பேரையும் கடந்த 27 தேதி  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையறிந்ததும், அங்கு தங்கியுள்ள சிறுவர்களின் உறவினர்களில் சிலர், சிறுவர், சிறுமிகளை, தங்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேற்று முன்தினம், சிறுவர்கள் காப்பகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சமையல் அறை, தங்கும் அறை, கழிப்பறை உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, தொற்று பாதிக்காத  சிறுவர், சிறுமிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தார்.

மேலும், காப்பகம் முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, காப்பகத்துக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். அனைத்து சிறுவர்களும் குணமான பிறகு, காப்பகம் திறக்கப்படும் என தெரிகிறது. சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories:

>