×

அக்டோபர் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும்..! ஐசிசி அறிவிப்பு

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அக்டோபர் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்கும் என்று  ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா பரவல் காரணமாக அமீரகம், ஓமனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2020ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தால் அந்தாண்டுக்கான உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021ஆம் ஆண்டுக்கான தொடரை இந்தியாவில் நடத்துவது என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.

ஆகவே அந்தத் தொடரை வழக்கம் போல நடத்த ஐசிசியும் பிசிசிஐயும் திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரை திட்டமிட்டு நடத்த வேண்டும் என பிசிசிஐ குறியாக இருந்தது. அதற்கான பணிகளையும் சிறப்பாக செய்து கட்டுக்கோப்புடன் இந்தியாவில் தொடரின் முதல் பாதியை நடத்திமுடித்தது. ஆனால் கொரோனாவுக்கு பொறுக்கவில்லை. கடும் கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள் கொரோனா உள்ளே நுழைந்தது. இதனால் ஐபிஎல் தொடரைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது பிசிசிஐ. தற்போது இந்தப் போட்டிகள் செப்டம்பருக்கு தள்ளி போயிருக்கின்றன. அதேபோல அனைத்துப் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில் டி20 உலகக்கோப்பைக்கான அறிவிப்பு ஒன்றும் வெளியானது. அதன்படி ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் 15ஆம் தேதி முடிவடைந்து, அக்டோபர் 17ஆம் தேதி உலகக்கோப்பையைத் தொடங்கலாம் என பிசிசிஐ ஐசிசிக்கு பரிந்துரைத்தது. அதேபோல அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லாததால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் ஏமனுக்கும் மாற்றப்போவதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது ஐசிசி உறுதிசெய்துள்ளது. டி20 உலகக்கோப்பை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி முடிவடையும் என்றும், அனைத்துப் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

Tags : D20 World Cup ,United Arab Emirates ,Oman ,ICC , T20 World Cup on October 17: United Arab Emirates and Oman ..! ICC announcement
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி