பழைய புகைப்படத்தை வெளியிட்டு நரேந்திர மோடிக்கு அதானியுடன் தான் நட்பு! சமாஜ்வாதி மூத்த தலைவர் டுவிட்

லக்னோ: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் கைது செய்யப்பட்டதாக வதந்திகள் கிளம்பின. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ராகேஷ் டிக்கைடுக்கு விவசாயிகளின் ஆதரவு இல்லை என்று, வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் சிலரிடம் இருந்து கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஐபி சிங் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பிரதமர் மோடி விமானத்தில் பயணம் செய்யும் போது, அவருடன் தொழிலதிபர் கவுதம் அதானியும் உள்ளார். மேலும், படத்தைப் பகிர்ந்த ஐபி சிங், ‘ராகேஷ் டிக்கைட்டுக்கு விவசாயிகளிடம் நட்பு இல்லை; ஆனால், இந்த மனிதருக்கு (மோடி) அதானியின் விமானத்தில் பறப்பவர்களுடன் நட்பு உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘மக்களின் அடிப்படை பிரச்னைகளிலிருந்து, திசைதிருப்பும் அரசியலை நடத்துவதில் பாஜக நிபுணத்துவம் பெற்றது. எந்த அரசிலும், இதுபோன்று போராடி வரும் விவசாயிகளுக்கு அவமதிப்பு நடந்ததில்லை. பொய்யான வாக்குறுதிகள் மூலம் பாஜக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>