×

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து மாஜி அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் கட்டிய கட்டிடத்தை அகற்ற உத்தரவு

மதுரை: கோயில் நிலத்தை ஆக்கிரமித்து மாஜி அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் கட்டிய கட்டிடத்தை அகற்ற வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் சேங்கைமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிவகங்கை நகர் கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 9.58 ஏக்கர் நிலம் காஞ்சிரங்கால் குரூப், மகா சிவனேந்தல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர். மாஜி அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.உதயகுமார் ஆஜராகி, ‘‘பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். ஆனால், கட்டிடத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிலத்தை மாஜி அமைச்சர் தரப்பினர் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதால், தடுத்து நிறுத்தக்கோரி கடந்த 2018ல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிமன்றம் 3 மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் கட்டிடம் கட்டும் அளவுக்கு வந்துள்ளது’’ என்றார்.

அறநிலையத்துறை தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட நிலம் மீட்கப்பட்டு கோயிலின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த கட்டிடத்தை ஜூன் 30க்குள் அவர்களாகவே அகற்ற வேண்டுமென சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘அறநிலையத்துறையின் நோட்டீசின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடத்தை அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை தரப்பில் இடித்து அகற்ற வேண்டும். இதற்கு ஆகும் செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Tags : Maji ,Minister Pascaran Partiers , Order to remove the building built by the party of former minister Baskaran occupying the temple land
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்