×

மராட்டியத்தில் ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள்: விசாரணை குழு அமைப்பு

தானே: மராட்டிய மாநிலம் தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அங்கு அவருக்கு சில நிமிடங்களில் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து அப்பெண் அவரது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் கணவர் உள்ளூர் அதிகாரியிடம் தடுப்பூசி குறித்து பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவியின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பெண் தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், எனது மனைவி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட சென்றதால்  தடுப்பூசி செயல்முறை பற்றி அறிந்திருக்கவில்லை. தடுப்பூசி போட்ட பின் அவருக்கு காய்ச்சல் இருந்தது ஆனால் அது மறுநாள் காலையில் குறைந்து விட்டது. என் மனைவி இப்போது நன்றாக இருக்கிறார் என்று கூறினார்.

மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே இதுகுறித்து கூறுகையில், டாக்டர்கள்  குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை கண்காணித்து வருகிறது. அவர் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் மற்றும் இது குறித்து விசாரணை நடத்த  ஒரு குழுவை அமைத்துள்ளோம் என கூறினார்.

இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. நிரஞ்சன் தவ்கரே, இதுபோன்ற கொடுமையான செயல் எவ்வாறு நடந்தது? ஒரே பெண்ணுக்கு மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டதை ஊழியர்கள் எவ்வாறு கவனிக்கவில்லை? பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம் என தெரிவித்துள்ளார். தானே மேயர் நரேஷ் மஸ்கே கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.


Tags : 3 doses of vaccines in a few minutes for a single woman in the Marathas: Inquiry panel system
× RELATED மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி...