தோகைமலை பகுதியில் அறுவடைக்கு தயாராகும் கம்பு பயிர்-விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாராகும் கம்பு சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் உணவு பயிர்களில் நெல், சோளத்துக்கு அடுத்துபடியாக கம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களில் கம்பு பயிர் செழித்து வளரக்கூடியது என்றும், உணவு தன்மைகளிலும் மற்ற மானியங்களை விட அதிகமான சத்து பொருட்களை பெற்றது என்றும் தெரிவிக்கின்றனர். கம்பு தானியமாக இருப்பதோடு இதன் தட்டை பகுதிகள் கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்து குறைபாடுகளை போக்குவதற்கு கம்பு மிகச்சிறந்த தானியமாக இருப்பதாக முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர்.

கம்பில் வீரியம் ஒட்டு ரகங்கள், கம்பு கோ(சியு)9, கம்பு வீரிய ஒட்டு (சியு)9 போன்ற ரகங்கள் உள்ளது. இதில் கோ (சியு)9 மற்றும் தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் வீரிய ஒட்டு (சியு)9 ஆகிய ரகங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும். மானாவாரியில் ஆடிபட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் இறவை பாசனத்தில் மாசிபட்டம், சித்திரை பட்டங்களிலும் பயிரிடலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும் என்றும் இதில் சால் விதைப்பு முறை பரவலாக நடைமுறையில் உள்ளதால் அளவுகள் மாறுபடும்.

விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ் பைரில்லாம் கலந்தபின்பு விதைக்க வேண்டும். பொதுவாக 15வது மற்றும் 30வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட கம்பு பயிர்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை தரும் தானியங்கள் கடினமாக இருக்கும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கம்பு பயிர் தட்டையை வெட்டி நன்றாக காயவைத்து கால்நடை தீவனங்களுக்காக சேமிக்க வேண்டும். கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என்றும் முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More