×

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் : ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்!

வாஷிங்டன் : 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதுமே பெரும் அச்சுறுத்தலாக கொரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது.சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளி என்று கூறப்படுகிறது. அதுதவிர தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் கொரோனா, மரபணு மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. இதனால், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு போடப்பட்டு வரும் அதே வேளையில் அது தொடர்பான பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில்,  கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர் டேவிட் என்ராட் தலைமையில் குழு நடத்திய ஆய்வில், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸின் கொடூரத் தாக்குதலால் கிழக்கு ஆசிய மக்களின் மரபணுக் கூறிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கிழக்கு ஆசியாவில் பல ஆண்டு கொரோனா வைரஸின் தாக்குதல் நீடித்து இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென் கொரியா, தைவான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் வசித்த மக்கள் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர்.

இந்த ஆய்வில் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 மக்களின் மரபணுவை ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு ஆய்வு செய்யும்போது அவர்களின் முன்னோர்கள் மூலம் அவர்களுக்குக் கடத்தப்பட்ட ஜீனில் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்திருக்கிறது. அதாவது வைரஸுக்கு எதிராகப் போராடிய முன்னோர்களின் ஜீன் தற்போது வாழ்ந்துவரும் மக்களுக்கும் கடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஜீன்களில் கொரோனா வைரஸ்கள் தங்களுடைய அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளதாகக் கூறுகின்றன.மேலும் தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பல தலைமுறைகளுக்கு வைரஸ் நீடிக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  



Tags : East Asia , கொரோனா வைரஸ்
× RELATED தைப்பூச பெருவிழா ராமதாஸ் வாழ்த்து