×

தேனி மாவட்டத்தில் 350 அரசு பஸ்கள் இயக்கம்-ஒரு மாதத்திற்கு பிறகு மக்கள் உற்சாக பயணம்

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று 350 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் குறைந்ததையடுத்து, அரசு உத்தரவுப்படி நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம், குமுளி ஆகிய அரசு போக்குவரத்துக் கழக கிளைகளில், கடந்த 2 தினங்களுக்கு முன், அனைத்து பஸ்களும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன. நேற்று காலை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கிளைகளில் இருந்தும் மொபசல் மற்றும் நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், நகர பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இயக்கப்பட்டன.

தேனி மாவட்ட கலெக்டர் க.வீ.முரளிதரன் தேனி புதிய பஸ்நிலையத்தில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பஸ்களுக்குள் ஏறிச்சென்று, பயணிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியோடு அமர வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பஸ் நடத்துனர்களிடம் வழிகாட்டு நெறிமுறைப்படி பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பஸ்களில் 50 சதவீத அளவிற்கே பயணிகளை அனுமதிக்க வேண்டும். பேருந்துக்குள் சமூக இடைவெளியுடம் பயணிகள் அமர வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது அரசு போக்கவரத்துக்கழக கோட்ட மேலாளர் சத்யமூர்த்தி உடனிருந்தார். நேற்று தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 249 மொபசல் பேருந்துகள், 105 நகர பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ற அளவில் தேனி மாவட்டத்தில் இருந்து அரசால் அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டன. ஒருமாத காலத்திற்கு பின், பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர். மேலும், மகளிருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நகர பேருந்துகளில் இலவச கட்டண அறிவிப்பினால் பெண்கள் ஆர்வமுடன் பயணித்தனர்.

Tags : Dani 350 government , Theni: 350 government buses were operated in Theni district yesterday. A month later the public traveled with enthusiasm. In TamilNadu
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...