திங்கள்சந்தை : இந்து சமய அறநிலையத்துறையின்கீழ், இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரணியல் வேணாட்டரசர்கள் அரண்மனையை ₹3.85 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இரணியலில் அமைந்துள்ள அரண்மனை கி.பி. 12ம் நூற்றாண்டில் இருந்து வேணாட்டரசர்களின் தலைமையிடமாக செயல்பட்டு வந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக கருதப்படுகிறது. ஆனால் நீண்ட காலமாக பராமரிக்கப்படாத காரணத்தினால், தற்போது இந்த அரண்மனையானது பொலிவிழந்து காணப்படுகிறது.
எனவே, இதனை மறுசீரமைத்து, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக மீட்டெடுக்கின்ற முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் இரணியல் அரண்மனையை சீரமைப்பதற்காக தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணியினை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் என்னிடத்திலும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில், அரண்மனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணிகளை முடித்திட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சீரமைக்கும் பணிகளுக்கு அதிகமாக நிதி தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி அதிக நிதியினை பெற்று, மறுசீரமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, சேதமடைந்த இரணியல் அரண்மனை கட்டிடம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு, தென்பகுதி பாகங்களின் பழுதடைந்த கட்டுமானங்கள், பழுதடைந்த கூரைகள் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் மூலம் கவனமுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், முதற்கட்டமாக மேற்கண்ட புனரமைப்பு பணிக்கு தேவைப்படும் தேக்கு மரங்கள் 1500 கன அடி தனி வகை செங்கல்கள், சுண்ணாம்பு, ஆற்றுமணல் ஒப்பந்தக்காரரால் தேர்வு செய்யப்பட்டு தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சிறிய அளவில் மட்டும் 5 பணியாளர்கள் மூலமே பணிகள் நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணிகளையும் நிறைவேற்றும் பணியில் ஈடுபடுவோம். இரணியல் அரண்மனையினை மறுசீரமைப்பு செய்வதற்கான காலதாமதம் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரணியல் அரண்மனைக்குட்பட்ட மார்த்தாண்டேஸ்வரர் குளத்தின் பழுதடைந்துள்ள படிக்கட்டுகள் சீரமைப்பது குறித்து, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வுகளில், பிரின்ஸ் எம்எல்ஏ, உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் அய்யப்பன், இரணியல் செயல் அலுவலர் சிவகாமி கந்தன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எஸ்.பி. சந்திரா, பிரிட்டோசேம், முன்னாள் அறங்காவலர்குழு உறுப்பினர் வேலப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
‘ஏவிஎம் கால்வாய் 4 கட்டங்களாக தூர்வாரப்படும்’
ஏ.வி.எம்.கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மனோதங்கராஜ், ‘ஏவிஎம் கால்வாய் நான்கு கட்டங்களாக தூர்வாரப்படும். முதலில் குளச்சல் முதல் மண்டைக்காடு வரையிலும், தேங்காய்பட்டணம் முதல் நீரோடி வரையிலும் அளவீடு செய்யும் பணி வருவாய் துறையின் வாயிலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து மத்திய நீர்வழிப்போக்குவரத்து துறையின் அமைச்சகத்தின் நிதி பங்களிப்புடனும், கால்வாயை சுற்றியுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்போடும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தி, தொழில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.