கிரீன் சர்க்கிள் பகுதியில் நெரிசல் குறைக்க வேலூரில் போக்குவரத்து திடீர் மாற்றம்-போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

வேலூர் : வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்க நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் ெசய்யப்பட்டுள்ளது. வேலூரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிரீன் சர்க்கிளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நிரந்தர தீர்வு காண முடியாமல் திணறி வருகின்றனர். பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில் வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் ஆகியவை கிரீன்சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்லும் வகையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்பாடிக்கு பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள், பழைய பைபாஸ் சாலை வழியாக நேஷனல் சர்க்கிளில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இடதுபுற சாலையில் திரும்பி சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலைக்கு செல்லும். பின்னர் சிறிது தூரம் சென்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மறுபுறம் உள்ள சர்வீஸ் சாலைக்கு சென்று பாலாறு புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். ஆனால் வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் கிரீன்சர்க்கிள் வழியாக காட்பாடிக்கு செல்லலாம். இதனை தெரிவிக்கும் வகையில் நேஷனல் சர்க்கிள் பகுதியில் 3 இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>