×

புகழ்பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் மாட வீதிகள், கிரிவலப்பாதை முழுவதும் கான்கிரீட் சாலைகளாக மாற்ற நடவடிக்கை-ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை முழுவதும் சிமென்ட் கான்கிரீட் சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தலைநகர் வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ.,க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், நீர்துளிகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:திருவண்ணாமலை நகருக்கு பல்வேறு பெருமைகளும், சிறப்புகளும் உள்ளன. இந்த நகராட்சி 135 ஆண்டுகள் பழமையானதாகும். மிகச்சிறந்த ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தம் பக்தர்கள் வருகின்றனர்.
எனவே, திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்காக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை எல்லாம் முதல்வரிடம் தெரிவித்து உடனடியாக செயல்வடிவம் அளிக்க நடவடிக்ைக எடுக்கப்படும்.

திருவண்ணாமலை நகரில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ேதவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். அதேபோல், திருவண்ணாமலை நகருக்குள் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
திருவண்ணாமலை நகருக்குள் தீயணைப்பு நிலையம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், உழவர் சந்தைகள் சீரமைப்பு, கூடுதலாக ஒரு போலீஸ் ஸ்டேஷன், நகரின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்துதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்படும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்கப்படும்.

அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள குப்பைக் கிடங்கை நகருக்கு வெளியே இடமாற்றப்படும். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தரப்படும். திருவண்ணாமலையில் விரிவான பரப்பளவில் நூலகம் அமைக்கப்படும்.திருவண்ணாமலையின் தொன்மை, பெருமை ஆன்மிகம் உள்ளிட்ட வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகம் வெளியிடப்படும். அதற்காக, வல்லுநர் குழு அமைத்து, தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி திருவண்ணாமலையில் பெருமை பேசும் புத்தகம் வெளியிடப்படும்.

திருவண்ணாமலை திருக்கோயிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோயில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பக்தர்கள் பயன்படுத்த பேட்டரி கார், கலையரங்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்படும்.திருப்பதியை போல திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகள் முழுவதும் தரமான கான்கிரீட் சாலையாக அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு, முதற்கட்ட ஆய்வுகள் நடந்து வருகிறது. அதேபோல், 14 கிமீ தொலைவுள்ள கிரிவலப்பாதை தார்சாலையாக உள்ளது. எனவே, அதில் நடந்து செல்ல பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதை முழுவதும் கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகளை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், எஸ்பி பவன்குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப், டிஆர்ஓ முத்துகுமாரசாமி, வேலூர் நகராட்சி மண்டல இயக்குநர் விஜயகுமார், முன்னாள் எம்பி வேணுகோபால், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் பிரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் விரைவில் இடம் தேர்வு செய்யப்படும்

கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘திருவண்ணாமலையில் தற்போதுள்ள பஸ் நிலையத்தில் நகரின் போதுமான இடவசதியில்லை. இனிவரும் காலங்களில் ஏற்படும் வளர்ச்சிக்கு தகுந்தபடி, திருவண்ணாமலை நகருக்கு வெளியே விசாலமான இடத்தில் பஸ் நிலையம் உருவாக்குவது அவசியம்.அண்ணா நுழைவு வாயில் ஈசான்ய மைதானம் பகுதியில் தற்போதுள்ள காலியிடம், பஸ் நிலையம் அமைக்க போதுமானதாக இல்லை.

எனவே, சென்னை, புதுச்சேரி, வேலூர் போன்ற நகரங்களில் இருந்து வரும் பஸ்கள், நகருக்குள் வருவதை தவிர்க்க, புதிய ரிங் ரோடுக்கு அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.இதுதொடர்பாக, ஏற்கனவே சில இடங்களை ஆய்வு செய்திருக்கிறோம். விரைவில் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Thiruvannamalai ,Minister ,EV Velu ,Kiriwalapatha , Thiruvannamalai: Cement concrete all over Thiruvannamalai Annamalaiyar Temple attic road and Kiriwalapatha.
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...