×

துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: காஷ்மீரில் போராட்டம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைக்க சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி, கட்டாய மத மாற்றம் செய்ததைக் கண்டித்து, சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்ஜிந்தர் எஸ் சிர்சா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘‘60 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக  சீக்கிய சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற 4 சம்பவங்கள் நடந்துள்ளன. ஜம்முவில் 2 சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், காஷ்மீர் ஆளுநரையும் சந்தித்து முறையிட உள்ளோம்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் தரப்பில் இத்தகவல்கள் மறுக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் உடல் ஊனமுற்ற 18 வயது சீக்கிய இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார் தரப்பட்டுள்ளது. அதன்பேரில் இளம்பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  அவர் விருப்பப்பட்டு குறிப்பிட்ட நபருடன் சென்றதாக நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் முதியவருடன் செல்லவில்லை, 29 வயது நபருடன் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த ஒரு சம்பவத்தை தவிர வேறெந்த சீக்கிய பெண்களும் மாயமாகவில்லை, கடத்தப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Kashmir , Forced conversion of Sikh women at gunpoint: Struggle in Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...