×

பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய ராணுவம் சீன எல்லையில் 50,000 வீரர்கள் குவிப்பு

லடாக்: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சீன எல்லையில் கூடுதலாக 50,000 வீரர்களை இந்திய ராணுவம் அனுப்பி உள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா, சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய, சீன எல்லை பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. கடந்த 1962ம் ஆண்டு போருக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லையில் அதிக கவனம் செலுத்தி வந்த இந்தியா தற்போது சீன எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்தில் கூடுதலாக 50,000 வீரர்கள் சீன எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல், அருணாச்சல பிரதேசம் என அனைத்து சீன எல்லைகளில் ஒட்டுமொத்த 2 லட்சம் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். இதுமட்டுமின்றி, அதிநவீன ஹெலிகாப்டர்கள் சீன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டள்ளன. எம்777 பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.  சமீபத்தில் பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரபெல் போர் விமானப் படையும் லடாக்கில் அமைக்கப்பட்டு சீன எல்லை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தைப் போலவே சீனாவும் அதன் எல்லையை ஒட்டி ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. இதற்கிடையே ஒருபுறம், படைகள் வாபஸ் தொடர்பாக இருநாட்டு ராணுவங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும், தொடர்ந்து எல்லையில் படை பலம் அதிகரிக்கப்பட்டே வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிக்க முயன்றால் பதிலடி கொடுப்போம்
லடாக் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2ம் நாளான நேற்று வீரர்களிடையே உரையாடினார். அவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு இங்கே கடுமையான சவாலை சந்தித்தோம். ஆனாலும் நமது வீரர்கள் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் அதை கையாண்டார்கள். நமது ராணுவம் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பதை உலகம் உணர்ந்தது. நாம் எப்போதும் அமைதிக்காக உழைக்கிறோம். யாரையும் இந்தியா தாக்கியதில்லை. இன்னொருவருக்கு எதிரானதாக நம் வெற்றி இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளோம். அதேவேளையில் நம் அமைதிப்போக்கை தவறாகப் பயன்படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க  இந்தியா தயாராகவே உள்ளது. இந்தியா எந்த ஆக்கிரமிப்புக்கும் இடமளிக்காது. எந்தவொரு சவாலுக்கும் உரிய பதிலடி கொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளோம்’’ என்றார்.

Tags : Indian Army ,Chinese , Defense, Indian Army, Chinese border
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...