×

கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு தொடர் கண்காணிப்பு செய்யும் வகையில் கண்காணிப்பு மறுவாழ்வு சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு, அந்த கோரிக்கையை ஏற்று மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என சட்டமன்றத்தில் கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயமாக பார்க்கிறேன்.

கிராமப்பகுதிகளில் அதிக விழிப்புணர்வு தற்போது வந்துள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி பணி தடை ஏற்படாமல் இருப்பதற்கு போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசும் கேட்டு பெற வேண்டும். டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. வரவும் வேண்டாம். ஆனால் சாதாரணமாக அதை எடுத்துக் கொள்ளாமல் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : C. Vijayabaskar , Corona Treatment, Rehabilitation Center, Former Minister C. Vijayabaskar
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...