×

நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

தாம்பரம்: குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 11 பேர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர். இந்த நிலத்தை மீட்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு அறநிலையத்துறை சட்டப் பிரிவு 78ன் கீழ் நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு சென்னை ஜகோர்ட்  ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற  கடந்த 3 ஆண்டுகளாக அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, நேற்று காலை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு, பாதுகாக்க வேண்டும் என்று  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் இன்றுவரை சுமார் 79 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அறநிலையத்துறை கைப்பற்றியிருக்கிறது. நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டு, அந்த வருவாயை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி வருவதை அறிந்த  அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அதன்பேரில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த இடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, ஆய்வு செய்ததில் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும்  தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலம் மீட்கப்பட்டு வருகிறது. பல இடங்களை கைப்பற்றுவதற்கு உண்டான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற பணிகள் தொடரும். கோயில் நிலத்தை ஆக்கிரமிதுள்ளவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Temple of Nemilicheri Agathieswara ,Sebabu , Owned by Nemilicherry Agathiswarar Temple Recovery of 2 acres of occupied land: Minister BK Sekarbabu personally inspected
× RELATED வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு...