×

90 ஆயிரம் வக்கீல்களுக்கு வேக்சின் போடும் பணி தொடக்கம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக உள்ளது: தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பாராட்டு

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மிகச் சிறப்பாக உள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள்   மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற  உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,

நீதிக்கரங்கள் அமைப்பின் அமைப்பாளர் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணை  தலைவர் எஸ்.பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர்  ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முகாமின் இரண்டாவது தவணை தடுப்பூசியை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செலுத்திக்கொண்டார்.  முகாமை தொடங்கிவைத்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசியபோது, ‘தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது அலை வந்தபோது முதலில் தயாராகாத நிலை இருந்தது. தற்போது அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்பேசும்போது,‘‘கொரோனா பெருந்தோற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான். 11 கோடி   மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில்,1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள்  மட்டுமே தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 கோடி  தடுப்பூசி  மருந்துகளை பெற்று தர உயர்நீதிமன்றம் சார்பில் ஒன்றிய அரசிடம் அறிவுறுத்த  வேண்டும்’’ என்றார்.

தடுப்பூசி தட்டுப்பாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்ரமணியம் பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்ற தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி  உள்ளது. 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி இல்லை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Tamil Nadu ,Chief Justice ,Sanjeeb Banerjee , Vaccination of 90,000 lawyers begins Vaccination work in Tamil Nadu is excellent: Chief Justice Sanjeeb Banerjee praises
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...