×

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜ வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.  நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும் தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Bajaj ,Judge ,AK Rajan ,Chennai , Bajaj case against Judge AK Rajan panel examining the implications of NEET exam: Chennai I-Court to hear soon
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...