×

கொழும்பு துறைமுக நகர திட்டம் சீனாவால் தமிழகத்துக்கு பேராபத்து

இலங்கை. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று. தனித்தீவாக, தனி நாடாக இருந்தாலும் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் இலங்கை, அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி, தமிழர்கள் வாழும் நாடு என்பதால் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் பந்தம் அதிகம்.  இந்தியாவைப்போல் இலங்கையும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த காலனி நாடுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்கள் கழித்து 1948 பிப்ரவரியில் இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தாலும், 1972ல் குடியரசு நாடாக மாறும்வரை இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இயற்கை வளம் கொண்ட இலங்கையில், இந்தியாவின் பெரு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. நம் அருகில் உள்ள சிறிய நாடு என்பதால், இலங்கை ஆட்சி அதிகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்போதுமே உண்டு. ஆனால், காலப்போக்கில் சீனாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் காட்டிய நெருக்கம் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக 2000களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மகிந்த ராஜபக்சே (தற்போதைய பிரதமர்), அவரது சகோதரர் கோத் பய ராஜபக்சே (தற்போதைய ஜனாதிபதி) ஆகியோர் சீனாவின் வலையில் வீழ்ந்தனர். இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா செலுத்தி வந்த  இந்த ஆளுமையை முடக்க சீனா திட்டமிட்டது.

இதற்காக 2014-ல் சீன அதிபர் ஷி ஜின்பிங் இலங்கைக்கு வருகை தந்தபோது, 1.4 பில்லியன் டாலர் (ரூ.10,400 கோடி) தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு ராஜபக்சே அரசுடன் சீன அரசு போட்டுக் கொண்ட திட்டம்தான், கொழும்பு துறைமுக நகரத் திட்டம். கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 660 ஏக்கர் நிலப்பரப்பை மீட்டமைத்து வானுயரக் கட்டிடங்களுடன் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள்  என ஒரு பிரமாண்டமான நகரத்தைக் கட்டுவதும், அந்நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். கட்டுமான பணியின் போது 2 லட்சம் பேருக்கும், பின்னர் 80 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், அப்போதே சில எதிர்க்கட்சிகள், இது சீனாவின் காலனியாக இலங்கையை மறைமுகமாக மாற்றும் செயல் என்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் சுற்றுச்சூழல் காரணங்களை முன்வைத்து 2015-ல் இத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், சீனாவுடனான உறவை முழுவதும் புறந்தள்ளிவிட முடியாததால், திட்டத்தை ரத்து செய்யவில்லை. 2019ல் ஜனாதிபதியாக கோதபய ராஜபக்சேயும் பிரதமராக மகேந்திர ராஜபக்சேவும் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தனர். பிறகென்ன சீனாவின் கை ஓங்கியது. கொழும்பு துறைமுக நகரம் திட்டம் மீண்டும் வேகமெடுக்க துவங்கியது.

கடலின் ஒரு பகுதியில் இருந்து மண்ணை அள்ளி துறைமுகம் அருகே இருந்த கடலுக்குள் கொட்டி  பணிகளை தொடங்கிவிட்டனர். இப்போது, கிட்டத்தட்ட 660 ஏக்கர் நிலமும் தயார். கட்டுமான பணிகள் துவங்க வேண்டியதுதான் பாக்கி. இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தால் பிரச்னை பூதாகரமாகி உள்ளது.  அந்த சட்டத்தின் பெயர், கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணையச் சட்டம். இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்ப்பு குரல் கிளம்பியது. அதில் உள்ள பல அம்சங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் அந்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானவை எனக் கூறி எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் 19 மனுக்களை இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

இச்சட்டத்தின்படி, அந்நகரத்தை நிர்வகிக்க “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம்” என்ற அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. அந்நகரில் வரிவசூலித்தல், திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இவ்வாணையத்துக்கே வழங்கப்படவுள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி இருக்கும்போதே, அதற்கு கட்டுப்படாத தனித்த அதிகார அமைப்பாகச் செயல்படும் தன்மை கொண்டதாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப் பிரிவுகளிலிருந்து இவ்வாணையத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அதாவது, கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் இருந்தாலும் அது சீனாவின் தனி பிரதேசமாக தன்னாட்சி பெற்று திகழும்.

இலங்கை குடிமக்கள் அந்த நகருக்குள் நுழைய விசா போன்ற சிறப்பு அனுமதி பெற வேண்டிய நிலை. இதெல்லாம் இலங்கை மக்களின் கவலை.  ஆனால், இதைவிட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் கொழும்பு துறைமுக நகரமே சீனாவின் கடற்படை தளமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அப்படி மாற்றினாலும் யாரும் கேட்க முடியாது. ஏனென்றால், அவர்களுக்குதான் கொழும்பு துறைமுக நகரமே சொந்தம். இலங்கையையொட்டிய இந்திய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அது சந்திக்க உள்ள ஆபத்துக்கள் பற்றி நினைத்தாலே வயிற்றில் புளியை கரைக்கிறது.  

இருநாடுகளிடையே சண்டை,  தீவிரவாதிகள் தாக்குதல் போன்றவற்றை நம் தமிழக மக்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்திருக்க முடியும். ஆனால், நம்ம பக்கத்து வீட்டிலேயே சீனாக்காரன் குடிவந்தால், நிலைமை என்னாவது.  இந்தியாவுக்கு வரும் கப்பல்களில் 70 சதவீதம் கொழும்பு துறைமுகம் வழியாகத்தான் வருகின்றன. அவற்றை கண்காணித்து, ஏதாவது சதி வேலையில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், சீனாவுக்கு தெரியாமல் எந்த பொருளையும் இந்தியா ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்ய முடியாது. இதனால், இந்தியாவின் கடல் வாணிபம் கடும் பாதிப்பை சந்திக்கும்.

முன்பு கொழும்பில் உள்ள தனது தூதரகம் வழியாக உளவாளிகளை பாகிஸ்தான்  அனுப்பி வைத்தது. அதேபோல், தனது உளவாளிகளை, தீவிரவாதிகளை அதிவிரைவு மோட்டார் படகுகள் மூலம் தமிழக கடற்கரைகளுக்கு சீனா அனுப்பும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இலங்கையையொட்டி தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், மகேந்திர கிரி இஸ்ரோ வளாகம், மணவாள குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலை, குலசேகரன் பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் ஆகியவை கொழும்பு துறைமுக நகரில் இருந்து 290 முதல் 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இவை அனைத்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். இவற்றை எளிதாக கண்காணிக்கவும்,  வேவு பார்த்து நாச வேலையில் சீனா ஈடுபடுவதற்கானஆபத்தும்
அதிகம்.

அதோடு, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ரகசிய தகவல்களை சீனா திருடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும், இந்திய செயற்கைகோள்களை சீனா எளிதாக கண்காணிக்கலாம். இந்திய நிறுவனங்கள் , அரசு துறை மீதான சீனாவின் சைபர் தாக்குதல் அதிகமாகும்.  வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம், வடக்கே லடாக்கில் மட்டும் அத்துமீறிய சீனா இனி தெற்கிலும் வாலாட்டும். அதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரையில்லாத அச்சுறுத்தல் ஏற்படும். கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும். சீனாவின் குள்ளநரித்தனத்தை முறியடிக்க  ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம்  ராக்கெட் ஏவு தள திட்டம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 2,300 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கிருந்து ராக்கெட் ஏவும்போது, கொழும்பு துறைமுக நகரில் இருந்து சீனர்கள் எளிதாக அதை திசைமாற்றவோ, நடுவானில் அழிக்கவோ வாய்ப்புள்ளது.

கூடங்குளம்  அணுமின்நிலையம்
திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் கொழும்புவில் இருந்து 270 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்ட தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு அணு உலைகள் உள்ளன. மேலும் 4 அணுஉலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இந்த அணு உலைக்கு ஆபத்து என்றால் தென் தமிழகம் மற்றும் கேரளாவின் பெரும் பகுதி நாசமாகும்.

இந்திய அரிய  மணல் நிறுவனம்
குமரி மாவட்டம் மணவாளகுறிச்சியில் இந்திய அரிய மணல் நிறுவனம் உள்ளது. கதிரியக்க தாது மணலை பிரித்தெடுக்கும் இந்த நிறுவனம் இந்திய அணு சக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஐ.என்.எஸ் கட்டபொம்மன்
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் 3000 ஏக்கர் பரப்பளவில் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் என்ற கடற்படை தளம் உள்ளது. இங்கு 13 ராட்சத தகவல் தொடர்பு கோபுரங்கள் உள்ளன. இதில் 301 மீட்டர் உயரமுள்ள மைய கோபுரம் இந்தியாவிலேயே 3வது உயரமான கோபுரமாகும். இங்கு செயல்படும்  மிக குறைந்த அலைவரிசை தகவல் தொடர்பு மையம் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள இந்திய போர், நீர் மூழ்கி கப்பல்களை தொடர்பு கொள்ள முடியும். இம்மையத்தை முடக்கினால், நீர் மூழ்கிகளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

மகேந்திரகிரி  இஸ்ரோ வளாகம்
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்தும வளாகம் அமைந்துள்ளது. இஸ்ரோ விண்ணில் செலுத்தும் ராக்கெட்களின் இன்ஜின்களை தயாரித்து, சோதனை செய்தல் இங்கு நடக்கிறது. சீனா இங்கு சதி வேலையில் ஈடுபட்டால் இந்தியாவின் ராக்கெட் ஏவும் பணிகள் கடும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.

கொச்சி துறைமுகம்
கொச்சி துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று. இங்கு ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்தையும், கப்பல் கட்டும் தளத்தையும் சீனாவால் எளிதில் கண்காணிக்க முடியும்.

துபாய், சிங்கப்பூர், ஹாங்காங்...
கொழும்பு துறைமுக நகரம் மூலம் ஆண்டுக்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங்கைப் போல, தெற்காசியாவின் நுழைவாயிலாக கொழும்பு நகரம் மாறும்; மிகப் பெரிய வணிக நகராக வளரும். இலங்கை முன்னேறிய நாடாகும். பாலாறும் தேனாறும் ஓடும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கற்பனை செய்திகளை  பரவவிட்டனர்.

அம்பாந்தோட்டையில் கோட்டை விட்ட இலங்கை
முதலில் சிறு முதலீடுகளுடன்தான் இலங்கையில் சீனா கால் பதித்தது. அம்பாந்தோட்டை துறைமுக திட்டம்தான் சீனா அதிக அளவில் முதலீடு செய்த பெரிய திட்டம். ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும், போட்ட முதலீட்டை எடுக்க முடியாது என்று இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பின் வாங்க, சீனா களமிறங்கி ஆயிரக்கணக்கான கோடிகளை அந்த திட்டத்துக்கு தாராளமாக கடனாக வழங்கியது. திட்டம் முழுமை அடைந்து துறைமுகம் முழுஅளவில் செயல்பட துவங்கியதும், 2012ல் அந்த வழியாக ஆயிரக்கணக்கான  கப்பல்கள் சென்றாலும் அதில் 34 தான் துறைமுகத்துக்கு வந்தது.

சீனாவிடம் துறைமுகத்துக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இலங்கை அரசு,  துறைமுகத்தையும் அதை சுற்றி உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. சீனா கைவசம் அம்பாந்தோட்டை துறைமுகம் போனதே,  தெற்காசியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தான ஒன்று என்று இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கை வந்த சீன போர் கப்பல் 2014ல் கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கி கப்பல் வந்தது. இதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தபோதும் அதை ராஜபக்சே அரசு கண்டுகொள்ளவில்லை. 5 நாட்களுக்கு பிறகுதான் அந்த நீர் மூழ்கி கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கதிரியக்க பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பற்றி இலங்கைக்கு தெரிவிக்காமலேயே அந்த துறைமுகத்துக்கு வந்தது. எங்க துறைமுகம், உங்களுக்கு ஏன் தெரிவிக்கணும் என்ற சீன மனோநிலைதான் இதற்கு காரணமாக கருதப்பட்டது.

சேது சமுத்திரம் திட்டம் நிறைவேறியிருந்தால்…
சேது சமுத்திர திட்டம் என்பது பாக் ஜலசந்தி மற்றும் இராமர் பாலம்  பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமாகும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் துவக்கப்பட்ட திட்டம் பாஜ அரசால் கைவிடப்பட்டது. இது நிறைவேறியிருந்தால், கடல் பகுதியில் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும். சரக்கு கப்பல்கள் இலங்கையை சுற்றி வர வேண்டியது இருந்திருக்காது. இப்போது சீனாவும் வாலாட்ட தயங்கியிருக்கும்.

அபாயங்கள் என்னென்ன?
* இந்தியாவின் கடல் வழி போக்குவரத்தை சீனா எளிதாக கண்காணிக்கும்.
* உளவாளிகள், தீவிரவாதிகளை கடல் வழியே ஊடுருவ செய்ய வாய்ப்பு.
* தமிழகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம்.
* 2014ல் கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து.
* இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையை ஆதிக்கம் செலுத்தும்.
* இந்தியாவின் செயற்கைகோள்களை சீனா கண்காணிக்கும் ஆபத்து..
* 2015ல் ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் நிறுத்தம்.
* 2019 மீண்டும் ராஜபக்ேசக்கள் ஆட்சியை பிடிக்க திட்டம் விறுவிறுப்பு
* 2021ல் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணையச் சட்டம் நிறைவேற்றம்.


Tags : Colombo ,Tamil Nadu ,China , Colombo port city project is a disaster for Tamil Nadu by China
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...