விமானப்படை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் போலீஸ் அதிகாரி குடும்பம் கூண்டோடு சுட்டுக்கொலை: நள்ளிரவில் தீவிரவாதிகள் வீடு புகுந்து அட்டூழியம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆளில்லா விமானம் மூலம் விமானப்படை தளத்தை தாக்கியதை தொடர்ந்து, நள்ளிரவில் போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்த தீவிரவாதிகள் அவரது குடும்பத்தை கூண்டோடு சுட்டுக் கொலை செய்தனர். ஜம்முவில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில், அவந்திபோராவில் ஹரிபாரிகாம் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு புகுந்த தீவிரவாதிகள் அகமதுவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவரை காப்பாற்றுவதற்காக அவரது மனைவி ரஜா பேகம், மகள் ராபியா உள்ளே நுழைந்தனர். இதில் அவர்களும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டனர்.

குண்டு காயங்களோடு இருந்த அகமது குடும்பத்தினரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில், மருத்துவமனை செல்லும் வழியில் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். மகள் ராபியா நேற்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தப்பியோடிய தீவிரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா டோக்ரா முன்னணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், பாகிஸ்தான் தேசியக்கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறுகையில், ``ஜெய்ஷ்-இ தீவிரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பகுதி இது.

எனவே, இந்த தாக்குதலுக்கு பின்னால் அவர்கள் இருக்க கூடும். நேற்றிரவு இங்கு வந்த தீவிரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர் என தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.  இதனிடையே, பாரிம்போரா சோதனைச் சாவடி அருகே லஷ்கர் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான நதீம் அப்ரார், சந்தேகத்துக்குரிய ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்முவில் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம், எட்கா பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த நிலையில், போலீஸ் அதிகாரி, குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் டிரோன் தாக்குதல்

ஜம்முவின் ரத்னுசாக்-கலுசாக் ராணுவ நிலைகள் அருகே இரவு 11.45, அதிகாலை 2.40 மணிக்கு, 2 ஆளில்லா விமானங்கள் பறந்தது கண்டறியப்பட்டு, எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கியால் டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். உடனடியாக அவை அங்கிருந்து பறந்து சென்று விட்டன. இதனால் ஒரு பெரிய தாக்குதல்  முறியடிக்கப்பட்டது.

Related Stories:

>