×

மாஜி அமைச்சர் பெயரில் லாரியில் மணல் கடத்தல்: 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(40). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை வழியாக வந்த டிப்பர் லாரியை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மணல் கடத்தியது தெரிந்தது. அந்த லாரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயர்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, லாரியில் இருந்த உரிமையாளர் திருப்பதி மற்றும் லாரியை ஓட்டி வந்த அவரது மகன் ஜெகதீசன் ஆகிய 2 பேர் மற்றும் மணல் கடத்திய டிப்பர் லாரியை நாட்றம்பள்ளி போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் எனக்கூறி லாரியில் அமைச்சரின் பெயரை எழுதி தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த திருப்பதி மற்றும் டிரைவர் ஜெகதீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags : Sands ,Maji Minister , Sand smuggling in the name of a former minister: 2 arrested
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...