×

திருமண தகவல் மையம் மூலம் மோசடி: லண்டன் நாயகன் எப்போது இந்தியா வருவான்?..‘துணையை’ தேடி ரூ.1.9 லட்சத்தை பறிகொடுத்த பெண்

அந்தேரி: திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் வசிப்பதாக கூறும் ஒருவரை நம்பி, ரூ. 1.9 லட்சத்தை பறிகொடுத்த  பெண், தற்போது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம்  பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண், வருங்கால கணவரை தேர்வு செய்வதற்காக பிரபல திருமண தகவல் மைய வலைத்தளத்தில் (மேட்ரிமோனி) பதிவு செய்தார்.  அதையடுத்து, இங்கிலாந்தில் வசிப்பதாக கூறிய  ஆதித்யா கணேஷ் என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதற்கு முன்னதாக நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, இந்தியாவில் சந்திக்க முடிவு செய்தனர்.  இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஆதித்யா கணேஷ், இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரவிருந்தார்.

லண்டன் விமான நிலையத்தில், தான் அதிக எண்ணிக்கையிலான நாணயத்தை (பவுண்டு) வைத்திருந்ததற்காக, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், உரிய அபராதம் செலுத்தினால்தான் தன்னை அதிகாரிகள் விடுவிப்பார்கள் என்று, அந்த பெண்ணிடம்  தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். ஆதித்யா கணேஷின் பேச்சை நம்பிய அந்த பெண், அவர் கேட்டுக் கொண்ட தொகையான ரூ.1,90,750 ஐ ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பி வைத்தார். பணம், ஆதித்யா கணேஷின் கைக்கு வந்து சேர்ந்தவுடன், அவர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.  அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை.

அதனால், அந்தேரி போலீசில், ஆதித்யா கணேஷ் மீது நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். இதையடுத்து, ஆதித்யா கணேஷ் மீது  இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் அந்தேரி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஆதித்யா கணேஷின் வங்கிக் கணக்கை முடக்குவதற்கான பரிந்துரையை, சம்பந்தப்பட்ட வங்கியின் நோடல் அதிகாரிக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Marriage ,London ,India , Fraud through Marriage Information Center: When will a London man come to India?
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...