×

கொரோனா விதிமுறையை மீறி முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து சுகாதார அமைச்சர் ராஜினாமா

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சராக மாட் ஹன்காக்‌‌ இருந்து வந்தார்.  பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமையின் கீழ் நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தார். இந்த சூழலில் இங்கிலாந்தில் கடந்த மாதம் வரை மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் விதமாக பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டி தழுவுதல் போன்றவற்றுக்கு சுகாதார அமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் மாட் ஹன்காக் இந்த விதிமுறைகளை மீறி பெண் உதவியாளர் ஒருவரை தனது அலுவலகத்தில் வைத்து கட்டி அணைத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சுகாதார அமைச்சர் மாட் ஹன்காக்கும் அவரின் மூத்த உதவியாளரான ஜீனா கோலன்டேஞ்சலோவும் முத்தமிடும் புகைப்படத்தை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல தினசரி பத்திரிகை வெளியிட்டது.

மாட் ஹன்காக் மற்றும் ஜீனா கோலன்டேஞ்சலோ ஆகிய இருவருக்குமே வெவ்வேறு நபர்களுடன் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றன. எனவே இருவருக்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக அந்த தினசரி பத்திரிகை செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாட் ஹன்காக் சமூக இடைவெளி விதிமுறையை மீறியதை ஒப்புக்கொண்டு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மன்னிப்பும் கோரினார்.

அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விடுவதாக இல்லை. எனவே மாட் ஹன்காக் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலரும் கூட மாட் ஹன்காக் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக சுகாதார அமைச்சர் மாட் ஹன்காக் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தில் மாட் ஹன்காக் கூறுகையில், நாம் கைவிட்டபோதிலும் (கொரோனா விதிகளை பின்பற்றுவதில்) நேர்மையை கடைபிடித்து இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான தியாகங்களை செய்துள்ள மக்களுக்கு அரசு கடன்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மாட் ஹன்காக்கின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய சுகாதார அமைச்சராக ஷாஜித் ஜாவித் என்பவரை நியமனம் செய்துள்ளார். இதனிடையே மான் ஹன்காக் முத்தமிட்ட ஜீனா கோலன்டேஞ்சலோவும் சுகாதார அமைச்சகத்தில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார்.

Tags : UK ,minister ,Corona , Controversial UK Health Minister resigns for kissing Corona
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...