×

கோபா அமெரிக்கா கால்பந்து: வலுவான பிரேசிலை 1-1 என சமன் செய்த ஈக்வடார்..! பெருவுடன் தோல்வியால் வெனிசுலா வெளியேற்றம்

பிரேசிலியா: தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றுள்ள கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோயானியாவில் நடந்த போட்டியில் பிரேசில்-ஈக்வடார் அணிகள் மோதின. பிரேசில் கேப்டன் நெய்மர், தியாகோ சில்வா, கேப்ரியல் ஜூசன் ஆகியோர் ஆடவில்லை. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 37வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிட்டாவ் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். 2வது பாதியில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில், ஈக்வடாரின் ஏஞ்சல் மேனா பதில் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் கோல் எதுவும் விழாததால் 1-1 என போட்டி சமனில் முடிந்தது. பிரேசிலியாவில் நடந்த மற்றொரு போட்டியில் வெனிசுலா-பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

2வது பாதியில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில், பெரு வீரர் ண்ட்ரே கரில்லோ கோல் அடித்தார். பின்னர் கோல் எதுவும் அடிக்கப்படாததால் இதுவே வெற்றி கோலாக அமைந்தது. 1-0 என பெரு வெற்றிபெற்று வெனிசுலாவை வெளியேற்றியது. பி பிரிவில் லீக் சுற்று முடிந்த நிலையில், பிரேசில் 4 போட்டியில் 3 வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளி, பெரு 2 வெற்றி, ஒரு தோல்வி ஒரு டிரா என 7, கொலம்பியா ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4, ஈக்வடார் 3 டிரா, ஒரு தோல்வி என 3 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. வெனிசுலா 2 டிரா, 2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏ பிரிவில் உருகுவே-பராகுவே, பொலிவியா-அர்ஜென்டினா மோதுகின்றன. இதில் பொலிவியா 3 போட்டிகளிலும் தோற்று ஏற்கனவே கால்இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நாளையுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.



Tags : Copa America Football ,Ecuador ,Brazil ,Venezuela ,Peru , Copa America: Ecuador draws strong Brazil 1-1 Venezuela expelled by defeat with Peru
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...