நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வி: காலிறுதியில் பெல்ஜியம், செக்.குடியரசு

செவில்லே: யூரோ கோப் பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல்லை வீழ்த்தி பெல்ஜியம் அணி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் வலுவான நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் செக்.குடியரசும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. செவில்லேவில் நேற்று நடந்த 2ம் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, பெல்ஜியத்துடன் மோதியது. இத்தொடரில் துவக்கம் முதலே தடுமாறி வந்த போர்ச்சுகல் அணி, இப்போட்டியிலும் சொதப்பியது. மற்றொரு பக்கம் பெல்ஜியம் வீரர்கள் நம்பிக்கையுடன் தாக்குதல் பாணியை கடைபிடித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் பெல்ஜியத்தின் மிட்ஃபீல்டர் தோர்கன் ஹசார்ட், பெனால்டி ஏரியாவிற்கு வெளியே இருந்து சக வீரர் கொடுத்த பந்தை வாங்கி, ஒரு அற்புதமான லாங் ஷாட்டின் மூலம் கோல் அடித்தார்.

2ம் பாதியில் போர்ச்சுகல் அணியின் கோல் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. சற்று பதற்றத்துடன் ஆடிய அவர்களால் கடைசி வரை கோல் ஏதும் போட முடியவில்லை. இறுதியில் இப்போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக புடாபெஸ்டில் நடந்த மற்றொரு 2ம் சுற்று ஆட்டத்தில் வலுவான நெதர்லாந்து அணியை எதிர்த்து செக்.குடியரசு களம் இறங்கியது. முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இரு அணிகளின் கோல் கீப்பர்களும் விழிப்புடன் இருந்து, எதிரணி வீரர்களின் கோல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்தனர். ஆனால் 2ம் பாதியில் செக்.குடியரசு வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. பெரும்பாலும் பந்து அவர்கள் வசமே இருந்தது.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிக்கை கோல் போஸ்ட்டின் கார்னரில் இருந்த செக்.குடியரசின் தடுப்பாட்ட வீரர் கலாஸ் பந்தை தலையால் முட்டி,  சக வீரர் டோஸ் ஹோல்சுக்கு பாஸ் செய்தார். அவரும் மிகச் சரியாக தலையால் முட்டி அதை கோலாக்கினார். 8வது நிமிடத்தில் செக். குடியரசின் ஃபார்வர்ட் பாட்ரிக் ஷிக், அழகாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். இறுதியில் இப்போட்டியில் நம்ப முடியாத வகையில் செக்.குடியரசு 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று இரவு கோபன்ஹெகனில் 9.30 மணிக்கு நடைபெற உள்ள 2ம் சுற்றுப் போட்டியில் குரோஷியா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு புகாரெஸ்ட்டில் நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் பிரான்சை எதிர்த்து ஸ்விட்சர்லாந்து மோதுகிறது.

Related Stories:

More
>