ஆம்பூர் அருகே நேற்றிரவு விபத்து லாரி மீது கார் மோதி பெண் உட்பட 3 பேர் பலி-நிச்சயதார்த்தம் முடிந்து திரும்பியபோது சோகம்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே  நேற்றிரவு லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். நிச்சயதார்த்தம் முடிந்து திரும்பியபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமவுலி(55). இவரது மனைவி வசுந்தராதேவி(50). இவர்களது மகன் வேணுகோபால்(25).

இந்நிலையில், வேணுகோபாலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள பெண்ணுடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர், வேணுகோபால், சந்திரமவுலி, வசுந்தராதேவி மற்றும் அவர்களது தாத்தா கன்னையன்(95) ஆகிய 4 பேரும் காரில் சென்னைக்கு திரும்பினர். காரை வேணுகோபால் ஓட்டி வந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது திடீரென இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும், இடிபாடுகளில் சிக்கிய வேணுகோபால் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தர்.

அதன்பேரில், ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ெதாடர்ந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். இதில் வேணுகோபால் மற்றும் அவரது தாத்தா கன்னையன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும், படுகாயமடைந்த சந்திரமவுலி, வசுந்தராதேவி ஆகியோரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் வசுந்தராதேவி இறந்தார். சந்திரமவுலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: