×

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை : கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என். அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:தமிழகத்தில் தீவிரமான  கொரோனா பரவல் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியான சூழ்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். தனது அயராத உழைப்பின் மூலம் மக்களை பாதுகாக்கும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.  அதன் மூலம், தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா பரவல் குறைத்து  வருகிறது.மீண்டும் 3வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.எனவே, 3வது அலையை எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.  திருவண்ணாமலை நகராட்சியில் 34 ஆயிரத்து 350 குடியிருப்புகள் உள்ளன.

ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 678 மக்கள் வசிக்கின்றனர்.  இவர்களின் நலனுக்காக இரவு பகல் பாராமல் 250 தூய்மைப் பணியாளர்கள், 120 டெங்கு ஒழிப்பு பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தற்போது 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.அரசு நேரடியாக எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில், தன்னார்வலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் போன்றோர் தாங்களாகவே முன்வந்து தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். அரசு மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொடர்ந்து திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ₹12.45 லட்சம் வழங்கி இருந்த நிலையில் இரண்டாவது தவணையாக நேற்று ₹2.60 லட்சம் நிதி அமைச்சரிடம் வழங்கினர்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ. வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா. ஸ்ரீதரன், முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன்,  பிரியாவிஜயரங்கன், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தனகோட்டி, கந்தன், பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,E.V.Velu , Thiruvannamalai: To protect against corona infection, all members of the public should be vaccinated regularly
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...