×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 48 நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து இன்று தொடங்குகிறது-கொரோனா தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, கடந்த மாதம் 10ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பின்னர், ஊரடங்கில் பல்ேவறு தளர்வுகளை படிப்படியாக அரசு அறிவித்தது.

ஆனாலும், பஸ் போக்குவரத்துக்கான அனுமதி மட்டும் தாமதமானது. அதைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த 25ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட மொத்தம் 23 மாவட்டங்களில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத 11 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதியில்லை.

எனவே, அனுமதிக்கப்பட்டுள்ள மொத்தம் 27 மாவட்டங்களுக்கு இடையே மட்டும் இன்று காலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து மொத்தம் 240 பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. அதையொட்டி, கடந்த 48 நாட்களாக இயக்கப்படாமல், பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களின் பழுதுகள் சரி செய்யப்பட்டு, இயக்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பணியில் ஈடுபடும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அனைவரும் இன்று காலை 5 மணிக்குள் பணிமனைகளுக்கு வந்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், திருவண்ணாமலையில் பயன்பாடின்றி கிடந்த பஸ் நிலையத்தை, லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. பயணிகள் அமரும் இடங்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. பஸ் நிலையம் முழுவதும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவானால், படிப்படியாக கூடுதலான பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Thiruvannamalai district , Thiruvannamalai: In Thiruvannamalai district, bus services will resume from today. In turn,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...