×

கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டரில் மீட்க நடவடிக்கை-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் அருகே உள்ள வடக்கு புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினமணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் வசீகரன் மற்றொரு மீனவர் மணிகண்டன் ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். தினமணி உள்ளிட்ட 3 பேரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பும்போது வசீகரன் என்பவர் கடலுக்குள் தவறி விழுந்தார். தேடி பார்த்து கண்டுபிடிக்க முடியாததால் மீமிசல் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வடக்கு புதுக்குடி நாட்டுப்படகு மீனவர்கள், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் உள்ளிட்டோர் கடலுக்குள் சென்று தவறி விழுந்த மீனவர் வசீகரனை தேடி கடலுக்குள் சென்றனர். மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வடக்கு புதுக்குடியில் வருவாய் துறை, மீன்வளத் துறை,உள்ளாட்சி துறை அதிகாரிகள் முகாமிட்டு மீனவரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் மீனவர் வசீகரன் குடும்பத்தினரை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மீனவர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரண உதவியும் வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாயமான மீனவரை மீட்பதற்காக மீன்வளத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது மீனவர் வசீகரனைத் தேடி மீனவர்கள் மற்றும் காவல்துறையினர் படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பாக மீட்டு வருவார்கள் என நம்புகிறோம். படகுகளில் சென்றுள்ளவர்கள் மீனவரை அடையாளம் காண முடியாவிட்டால் ஹெலிகாப்டர் மூலம் தேட முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் கடலுக்குச் சென்று தவறி விழுந்து மாயமான மீனவரை உயிருடன் மீட்கவும், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Maidanathan , Aranthangi: Dinamani hails from North Pudukudi area near Kottai Pattinam in Pudukkottai district. He owns Piper
× RELATED தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை...