×

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்!!

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து பல சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் பல கைதிகள் உயிரிழந்து வரும் நிலையில், பல்வேறு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக பேரறிவாளன் கடந்த மாதம் 28ம் தேதி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து ஒரு மாத பரோல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து பேரறிவாளன், இன்று மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனின் மருத்துவ சிகிச்சையை கருத்தை கொண்டு பரோலை நீட்டித்து அரசின் கூடுதல் உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாட்களுடன் சேர்த்து மேலும் 30 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரோல் நீடிக்கப்பட்டதால் பேரறிவாளன் இன்றே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதம்மாள் ட்வீட்

இதனிடையே பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.


Tags : Perarivalan ,Chief Minister ,MK Stalin , அற்புதம்மாள்
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...