×

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி : மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டுவரும் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டித்து ஜனாதிபதி ஒப்புதலுடன் மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்தகி கடந்த 2017ம் ஆண்டு தனது சொந்த காரணங்களுக்காக விலகியதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞராக இருந்த கே.கே வேணுகோபாலை அதே ஆண்டு ஜூலை 1ம் தேதி தலைமை வழக்கறிஞராக மத்திய அரசு நியமித்தது.

இதில் மூன்று ஆண்டு அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் அது இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வரும் 2022 ஜூன் 30ம் தேதி வரை பதவியில் நீடிப்பார் என தெரியவந்துள்ளது.

இதில் மூத்த வழக்கறிஞராக இருந்த கே.கே.வேணுகோபால், நாட்டின் 15வது தலைமை வழக்கறிஞராக பதவி ஏற்றிருந்தார். இவர் நீதித்துறையில் சுமார் 60 ஆண்டு காலம் அனுபவம் மிக்கவர் ஆவார். அவருக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதியுடன் 90 வயதாகிறது. இதில் கே.கே.வேணுகோபால் தனது வழக்கறிஞர் பணியை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தொடங்கி, உச்ச நீதிமன்றத்தில் மண்டல் கமிஷன், அயோத்தி, நீதிபதிகள் நியமனம், ரபேல் விமானம் கொள்முதல், வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கதாக்கும்.

Tags : KK Venugopal ,Attorney General ,Central Government , கே.கே வேணுகோபாலை
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...