×

ஆந்திராவை போல் தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : ஜெகன் வழியில் அன்புமணி ராமதாஸ்!!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் அரசு பணியாளர்களுக்கான குரூப் 1 தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து அரசுத் தேர்வுகளிலும் இனி நேர்முகத்தேர்வுகள் நடைபெறாது என தெரிவித்துள்ள அவர், தேர்வு நடைமுறையில் மீதான வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் , நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.எழுத்துத் தேர்வுகளில் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Anbumani Ramadas , அன்புமணி ராமதாஸ்
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...