பிரிட்டனில் வழக்குகள் தள்ளுபடி விஜய் மல்லையாவுக்கு எல்லா கதவும் மூடின: ‘தூக்கி வர’ வேண்டியதுதான் பாக்கி

புதுடெல்லி: இந்திய வங்கிகளில் பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா ரூ.9,500 கோடியும், வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், மெகுல் சோக்‌ஷியும் ரூ.13,500 கோடியும் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பினர். அவர்களை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகளை சிபிஐ.யும், அமலாக்கப் பிரிவும் எடுத்து வருகின்றன. தன்னை நாடு கடத்துவதை  எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.  முதலில், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடவும் நீதிமன்றம் தடை விதித்து விட்டது.

இதனால், சட்டத்தின் மூலம் காலம் தாழ்த்துவதற்கான அனைத்து கதவுகளும் மல்லையாவுக்கு மூடப்பட்டு விட்டது. இனிமேல், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து சிறையில் அடைக்க வேண்டியதுதான். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சிபிஐ.யும். அமலாக்கத் துறையும் தெரிவித்துள்ளன.  அதேபோல், நீரவ் மோடியும் தன்னை நாடு கடத்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செய்த முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இனிமேல், அடுத்த மேல்முறையீடு ஒன்று மட்டுமே அவருக்கு வாய்ப்பாக உள்ளது. அதுவும் விரைவில் முடிக்கப்பட்டு அவரும், டொமினிக்கோ நாட்டு சிறையில் இருக்கும் மெகுல் சோக்சியும் இந்தியா அழைத்து வரப்படுவதற்கான நேரம் நெருங்கி விட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories:

More