×

யூரோ கோப்பை கால்பந்து: கால் இறுதியில் இத்தாலி; டென்மார்க் முன்னேற்றம்

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் கால் இறுதியில் விளையாட இத்தாலி அணி தகுதி பெற்றது. பரபரப்பான நாக் அவுட் சுற்றில், லண்டன் வெம்ப்ளி அரங்கில் நடந்த கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரியாவை எதிர்கொண்டது இத்தாலி அணி. இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால், இரண்டு பாதி ஆட்டத்திலும் கோல் அடிக்காமல் 0-0 என சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய இத்தாலி அணிக்கு பெடரிகோ சியசா 95வது நிமிடத்திலும், மேட்டியோ பெஸ்ஸினா 105வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். ஆஸ்திரியா வீரர் கலாஜ்சிக் 114வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

 எனினும், மேற்கொண்டு இரு தரப்பிலும் கோல் ஏதும் விழாததால், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. பெல்ஜியம் - போர்ச்சுகல் அணிகளிடையே நடைபெறும் போட்டியில் வெற்ரி பெறும் அணியுடன் இத்தாலி கால் இறுதியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் டென்மார்க் - வேல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய டென்மார்க் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை பந்தாடி கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் டோல்பெர்க் 27வது மற்றும் 48வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து மேல் 88வது நிமிடத்திலும், பிரெய்த்வெய்ட் 90’+4வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ஆட்ட நேர முடிவில் டென்மார்க் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதியில் நுழைந்தது. நெதர்லாந்து - செக் குடியரசு அணிகளிடையே நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் டென்மார்க் கால் இறுதியில் மோதும்.

Tags : Euro Cup ,Italy ,Denmark , Euro Cup, Football, Italy, Denmark
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...