விம்பிள்டன் இன்று தொடக்கம்

லண்டன்: பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் இன்று தொடங்குகிறது. புல்தரை மைதானத்தில் நடைபெறும் இந்த பாரம்பரியமிக்க தொடர், கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக இந்த போட்டி ரத்தானது டென்னிஸ் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா), 6வது முறையாக இங்கு கோப்பையை முத்தமிடுவதுடன் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று பெடரர் மற்றும் நடாலின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் உள்ளார்.

இத்தொடரில் இருந்து நடால் விலகியுள்ள நிலையில், 39 வயது பெடரர் 9வது முறையாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க வரிந்துகட்டுகிறார். 2019 பைனலில் ஜோகோவிச் 5 செட்கள் கடுமையாகப் போராடி பெடரரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இளம் வீரர்கள் சிட்சிபாஸ், மெட்வதேவ், அலெக்சாண்டர், தீம் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. ஜப்பான் நட்சத்திரம் ஒசாகாவும் விலகியுள்ள நிலையில்... ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி, அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், இகா ஸ்வியாடெக் (போலந்து) உள்பட முன்னணி வீராங்கனைகள் பட்டம் வெல்லத் துடிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, ஒவ்வொரு போட்டிக்கும் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், ஜூலை 10, 11ல் சென்டர் கோர்ட்டில் நடைபெற உள்ள ஒற்றையர் இறுதி ஆட்டங்களுக்கு முழுமையாக 15,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார்.

Related Stories: