×

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி (வயது 94) மாரடைப்பால் காலமானார். காரைக்குடியை சேர்ந்த அவர், தனது 8 வயதிலேயே ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஜெமினி நிறுவனத்தில் குரூப் டான்சராக ஒப்பந்தமானார். தொடர்ந்து 500 படங்களுக்கு மேல் நடனம் ஆடிய அவர், நடிகையான பிறகு ‘காதல் படுத்தும் பாடு’, ‘குழந்தை உள்ளம்’, ‘பத்தாம் பசலி’, ‘உனக்காக நான்’, ‘திருடன்’, ‘ஒருத்தி மட்டும் கரையினிலே’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சின்ன வீடு’, ‘கயல்’, ‘எதிர் நீச்சல்’, ‘வேலைக்காரன்’ உள்பட பல மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ’16 வயதினிலே’ படத்தில், ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குறவளாச்சே’ என்ற பழமொழியை காந்திமதியை எதிர்த்து பேசியதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

முதுமை காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெமினி ராஜேஸ்வரி, குரோம்பேட்டையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் காலமானார். அவரது கணவர் ஆர்.ராஜன் ஏற்கனவே காலமாகி விட்டார். ஜெமினி ராஜேஸ்வரிக்கு தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.

Tags : Gemini Rajeswari , Veteran actress, Gemini Rajeswari, has passed away
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...