×

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் மாளிகை முன் எளிய முறையில் நடந்த இவ்விழாவில் நமச்சிவாயம் உள்பட 5 அமைச்சர்களுக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 16 இடங்களில் வென்றது. இதில் முதல்வராக என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மாதம் 7ம் தேதி பதவியேற்றார். அமைச்சர்கள் பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜ இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சபாநாயகர், 2 அமைச்சர்களை பெற்றுக்கொள்ள பாஜக சம்மதம் தெரிவித்தது.

தொடர்ந்து, அமைச்சர்கள் யார்? பதவியேற்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 23ம் தேதி புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அமைச்சர்கள் பட்டியலில் பாஜவை சேர்ந்த நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன் குமார், என்ஆர் காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இதற்கு மத்திய உள்துறையை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.  இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு நடந்தது. இதற்காக கவர்னர் மாளிகை முன் விழா மேடை அமைக்கப்பட்டது. மேடையில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அமர 10 இருக்கைகள் மட்டும் போடப்பட்டது.  

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கு கவர்னரும், முதல்வர் ரங்கசாமியும் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் முருகன், என்.ஆர்.காங்கிரஸ், பாஜ எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.    40 ஆண்டுக்கு பிறகு பெண் அமைச்சர்: கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை கல்வி அமைச்சராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்றார்.

இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். கூட்ட நெரிசலில் எம்எல்ஏ காயம்: அமைச்சர்களாக பதவியேற்றவர்களை வாழ்த்த ஏராளமான வர்கள் குவிந்தனர். நமச்சிவாயம் அறையில் ஏற்பட்ட நெரிசலில், கதிர்காமம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு... பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் தமிழிசை
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.  கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் இந்த சொல்லாடலை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு தமிழக பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்போது, இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என உறுதிமொழி வாசித்தார். அதை அப்படியே அமைச்சர்களும் வாசித்தனர்.

Tags : Pondicherry ,Governor , New ministers sworn in after long drag in Pondicherry: Governor sworn in
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...