×

தமிழகம் முழுவதும் எஸ்பிஐ ஏடிஎம்மில் 9 பேர் கும்பல் கைவரிசை குற்றவாளிகளின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்

* போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் அம்பலம்
* மற்றொரு கொள்ளையன் சென்னை கொண்டு வரப்பட்டான்

சென்னை: எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் நூதன திருட்டில் 9 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும், மற்றொரு கொள்ளையனான வீரேந்திர ராவத் என்பவனை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர்.  சென்னையில் ராமாபுரம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வடபழனி, வேப்பேரி, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.45 லட்சத்துக்கு மேல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல தலைமை மேலாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருட்டு நடந்த ஏடிஎம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் 4 பேர் கொண்டு வடமாநில கும்பல் ஒன்று கைவரிசை காட்டியது தெரியவந்தது.  அதைதொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார்  அரியானா மாநிலம் சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் கடந்த 23ம்தேதி அமீர் அர்ஷ்  என்பவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்  அமீர் அர்ஷை சென்னைக்கு  கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 பேர் கொண்ட குழு தனித்தனியாக பிரிந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. குறிப்பாக சென்னையில் 15 இடங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா 1 இடம் என மொத்தம் 21 இடங்களில் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் மற்றொரு கொள்ளையனான அரியானா மாநிலம் பல்லப்கர்க் பகுதியை ேசர்ந்த வீரேந்திர ராவத்(23) என்பவனை தனிப்படையினர் கைது செய்தனர். அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட வீரேந்திர ராவத்தை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் எற்கனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வரும் அமீர் அர்ஷ் உடன் ேநரடியாக வீரேந்திர ராவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் திருடிய பணத்தில் கிடைத்த பங்கை தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட  அமீர்  அர்ஷ் மற்றும் வீரேந்திர ராவத் ஆகியோர் பயன்படுத்தி வந்த 3 வங்கி கணக்குகளை போலீசார் அளித்த தகவலின் படி வங்கி அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை நூதன திருட்டில் ஈடுபட்ட 9 பேர் அடையாளம் காணப்பட்டு  அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளி உட்பட 7 பேரை தனிப்படையினர் அரியானாவில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : SBI ,Tamil Nadu , Tamil Nadu, SBI, ATM, criminal, bank account
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...