×

மீனவர்களின் சேமிப்பு திட்டத்தின் கீழ் நிதி பெறாமல் அலட்சியம் தமிழக அரசுக்கு ரூ.92.66 கோடி இழப்பு: சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம்

சென்னை: மீனவர்களுக்கான மத்திய அரசின் சேமிப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற தவறியதால் தமிழக அரசுக்கு ரூ.92.66 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.  இது குறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீனவர்களுக்கான மத்திய அரசின் திட்டமான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி மீனவரின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1500 சேர்த்து மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவர்களுக்கு அளிக்கப்படும்.தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து நிதி ஒப்பளிப்பு செய்து மீனவ மக்களுக்கு வழங்குகிறது.

கடந்த 2012-13 முதல் 2017-18 வரை மத்திய அரசின் பங்களிப்பான ரூ.110 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டது. எனினும் 2012-13 முதல் 2013-14 வரை மத்திய அரசு வெறும் ரூ.17.65 கோடி மட்டுமே விடுவித்தது. மீதத்தொகையான ரூ.92.66 கோடி கடந்த 2018 ஆகஸ்டில் மத்திய அரசிடம் இருந்து பெறப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பெறப்படாததால் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு ரூ.92.66 கோடி மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2016-17ம் ஆண்டில் இருந்து அனைத்து மீன்வளத் திட்டங்களும் நீலப்புரட்சி என்கிற குடையின் கீழ் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டதால் மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், திட்டங்களின் மறு கட்டமைப்புக்கு முந்தைய காலங்களான 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுகளிலும் நிதி பெறப்படாததால் தமிழக அரசு கூறியது ஏற்புடையதல்ல. மேலும் மத்திய அரசின் பங்களிப்பை பெற போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே இதை குறிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பை பெற போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே இதை குறிக்கிறது.

Tags : Tamil Government ,CAG , Fishermen, Indifference, Government of Tamil Nadu, CAG
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...