×

தொழிலதிபரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிய உதவி கமிஷனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு: நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

சென்னை: சென்னையில் தொழிலதிபரை கடத்திச் சென்று பண்ணை வீட்டில் ஒரு வாரமாக அடைத்து வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய விவகாரத்தில் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அனைவரையும் நேரில் ஆஜராகும் படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை அயப்பாக்கம் 5வது முதன்மை சாலையை சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபரான இவர், கம்ப்யூட்டர் நிறுவனம், செக்யூரிட்டி நிறுவனம் என்று பல தொழில்களை செய்து வந்தார். இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தொழில் தொடர்பாக எனக்கு அறிமுகமானார். நான் தனியாக கம்ப்யூட்டர் கம்பெனி தொடங்க இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

அவரும், தான் சாய் சாப்டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நீங்கள் கம்பெனி தொடங்கினால் உங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் தருகிறேன் என்றார். இதற்காக ரூ.10 லட்சம் டெபாசிட் கொடுக்க வேண்டும் கூறினார். நானும் அவர் கூறிய படி பணத்தை கட்டினேன். நிறுவனத்தை தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் வெங்கடேஷ், நாங்கள் செய்த வேலைக்காக 2015ம் ஆண்டு வரை சரியாக ரூ.25 லட்சம் வங்கி மூலம் கொடுத்தார். அதன்பின்னர் சம்பளம் கொடுக்கவில்லை. அவர் பணம் தருவார் என்ற நம்பிக்கையில் ரூ.5.5 கோடி கடன் வாங்கி சம்பளம் கொடுத்தேன். பின்னர் என்னால் கடன் வாங்கி நிறுவனத்தை நடத்த முடியவில்லை. இதனால் என்னுடைய நிறுவனத்தை மூடிவிட்டேன்.

பிறகு சிறுக சிறுக வெங்கடேசன் ரூ.5.5 கோடி பணம் கொடுத்தார். இந்தப் பணத்தை வைத்து வங்கியில் நான் வாங்கிய கடன் போக மீதம் உள்ள பணத்தை வைத்து அயப்பாக்கம், செவ்வாய்பேட்டை, அண்ணணூர், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களில் இடம் வாங்கினேன். வெங்கடேஷிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியிருந்தேன். அதை வைத்து வீடு கட்டினேன். மீதம் உள்ள பணத்தை வைத்து விருகம்பாக்கத்தில் செக்யூரிட்டி கம்பெனியை ஆரம்பித்தேன். ஆனால் வெங்கடேஷிடம் வாங்கிய பணத்தை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால், என்னுடைய விருகம்பாக்கத்தில் உள்ள செக்யூரிட்டி கம்பெனியை வெங்கடேசுக்கு கொடுத்துவிட்டேன். இதன் மூலம் நான் வாங்கிய கடன் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், 2018 ஜூன் மாதம் எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், வெங்கடேஷ், சிவா என்பவரிடம் ரூ.20 கோடி ஏமாற்றி விட்டதாகவும் கூறினார். வெங்கடேஷ் உங்களுக்கு அதிக அளவில் பணம் தந்துள்ளார். அந்தப் பணத்தை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார். சிபிஐ அலுவலக முகவரி கேட்டதும், போனை துண்டித்து விட்டார். 2019ம் ஆண்டு மே மாதம் சிலர் போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி திருமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், என்னை மிரட்டி சொத்து விவரங்களை கேட்டார். நானும் கூறினேன்.

அங்கு வெங்கடேசுக்கு தெரிந்த சிவா மற்றும் 2 போலீசாரை என் வீட்டுக்கு அனுப்பினர். அவர்கள் என் அம்மாவை மிரட்டி என்னுடைய சொத்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல்நிலையம் வந்தனர். பின்னர் 2 சொத்துக்களை சிவா பெயரில் எழுதிக் கொடுக்கும்படி என்னை என் அம்மா முன்னிலையில் போலீசார் தாக்கினர். இதைப் பார்த்த என்னுடைய அம்மா, சொத்துக்களை எழுதிக் கொடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி எங்கள் சொத்தை சிவா பெயரில் எழுதி வாங்கி கொண்டனர்.பின்னர் திருமணம் செய்ய உள்ள பெண்ணுடன், கோவை சென்று ஓட்டலில் தங்கியிருந்தோம். 2019 அக்டோபர் 2ம் தேதி அதிகாலையில் சென்னை திருமங்கலம் எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையில் வந்த போலீசார் என்னை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர். என் வருங்கால மனைவியையும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் அடுத்த நாள் என் அம்மா, வருங்கால மனைவியின் தம்பி ஆகியோரையும் அழைத்து வந்து அடைத்து வைத்து மிரட்டினர்.

அப்போது சொத்தை எழுதித் தரும்படி ஒரு வாரம் பண்ணை வீட்டில் வைத்து அடித்து, உதைத்தனர். என் வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வோம் என்று மிரட்டினர். அவர்களது மிரட்டல் மற்றும் அடி தாங்க முடியாமல், அவர் சொன்னபடி திருள்ளூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் தருண் கிருஷ்ணபிரசாத் என்பவருக்கு என் சொத்துக்களை எழுதிக் கொடுத்தேன். அதோடு இல்லாமல் என்னுடைய பழைய செக்யூரிட்டி கம்பெனிக்கு அழைத்துச் சென்று 100 பேப்பரில் எழுதி வாங்கினர். லேப்டாப், கேமரா, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனவே, எனது சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி தொழிலதிபர் புகாரின் படி விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் ராஜேஷை அப்போது திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த சிவக்குமார் மற்றும் அப்போதைய திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ. பாண்டியராஜன் உட்பட 10 பேர் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக  உதவி கமிஷனர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் தொழிலதிபரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கியது உறுதியானது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முன்பு திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த சிவக்குமார். இன்ஸ்பெக்டர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல், ஆள்கடத்தால் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 பேரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும், அரசு பதவியை தவறாக பயன்படுத்திய 3 காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் தமிழக காவல் துறை இயக்குநருக்கு கடிதம் வழங்கியுள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தில் 3 காவல் துறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Assistant Commissioner ,CBCID , Entrepreneur, Assistant Commissioner, Case Registration, CPCIT
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...