×

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: மேலும் 23 மாவட்டத்தில் போக்குவரத்து சேவையும் தொடங்கியது; ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலானது

சென்னை: ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது. இதையடுத்து வழிப்பாட்டு தலங்கள்  திறக்கப்படுகிறது. துணி, நகைக்கடைகள் இயங்குகிறது. மேலும் 23 மாவட்டத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவையும் தொடங்குகிறது. கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து நோய்த் தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது.

அதே நேரத்தில் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் பெரும்பான்மையான மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 5ம் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி அறிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வகை 1ல் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் என 11 மாவட்டங்களும், வகை 2ல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் என 23 மாவட்டங்களும், வகை 3ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. வகை 1, 2ல் உள்ள மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வகை 2ல் உள்ள 23 மாவட்டத்திற்குள்ளும். வெளியேயும் பொது பேருந்து போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமலும் 50% இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்கலாம். வகை 3ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படலாம். அனைத்து நகைக்கடைகள்காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.

 கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுகிறது.வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு நேற்று காலை முதல் சென்னையில் உள்ள அனைத்து கோயில்களிலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் அவர்கள் டோக்கன் அடிப்படையில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வகை 2, 3ல் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மின் பணியாளர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவார்கள். உடற்பயிற்சிக் கூடங்கள்,  யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து நேற்று அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது. அதே நேரத்தில் அருங்காட்சியகம், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வாங்கிங் செய்யலாம்.

Tags : Chennai ,Sengalupatu ,Kanchipura ,Thiruvallur ,More ,District Transport Service , Places of worship, transport service, curfew
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...