×

பக்க விளைவு அச்சம் உள்ள நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளை போடலாம்!: எய்ம்ஸ் தலைவர் தகவல்

புதுடெல்லி: கொரோனா தடுப்புக்காக இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் - 5 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதில், முதற் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் (உதாரணத்திற்கு கோவிஷீல்டு), இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் அதே நிறுவன தடுப்பூசியை போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசியை மாற்றிப் போட்டால், பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இதனால், மக்களிடையே ஒருவித குழப்பம் நீடிக்கிறது. சில இடங்களில் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் அதே மருந்து கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில், ‘முதல் டோஸ் தடுப்பூசி அடிப்படை தடுப்பூசியாகவும், இரண்டாவதாக போடப்படும் வேறு நிறுவன தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளையும் போடுவதால் சற்று அதிகமான பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதாக சிலர் கண்டறிந்துள்ளனர். மற்றவர்கள் இதுபோன்று இருவகையான நிறுவன தடுப்பூசிகளை போடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும், ஆன்டிபாடி பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

எந்த தடுப்பூசியுடன், மற்றொரு தடுப்பூசியை இணைப்பது என்பது எனக்குத் தெரியாது. முதற்கட்ட ஆய்வுகளின்படி, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்ற ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விஷயத்தை மத்திய அரசும் கவனித்து வருகிறது. சோதனைகளின் முடிவுகள் சில மாதங்களில் கிடைக்கும்’ என்றார். வெவ்வேறு தடுப்பூசிகளை போடுவது குறித்து, பிரிட்டிஷ் நிறுவன ஆய்வின் ஆரம்பநிலை முடிவுகள் கடந்த மாதம் லான்செட் இதழில் வெளியாயின. அதன்படி, கோவ்ஷீல்டின் முதல் டோஸ் மற்றும் ஃபைசரின் இரண்டாவது டோஸ் எடுத்தவர்களில் பக்க விளைவுகள் லேசானவை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Side Effect, Vaccine, AIMS Head, Information
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...