×

5 அமைச்சர்களுடன் புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி:  புதுச்சேரியில் 5 அமைச்சர்களுடன் கூடிய புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். புதுச்சேரி சட்டமன்றத்துக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் (10), பா.ஜ.க. (6) கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆளுநரை சந்தித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் அழைப்பின்பேரில் கடந்த  மாதம் 7ம் தேதி பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை. இந்தநிலையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சபாநாயகர், 2 அமைச்சர்களை பெற்றுக் கொள்ள பா.ஜ.க. சம்மதம் தெரிவித்தது. அந்த வகையில் கடந்த 16ம் தேதி பா.ஜ.க.வை சேர்ந்த செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவர் பதவியும் ஏற்றார்.

அடுத்ததாக அமைச்சர்கள் பதவி ஏற்பு என்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 23-ந் தேதி புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்த பட்டியலில் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.யார், யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்பதை தெரிந்து கொள்வதில் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் ஆர்வம் காட்டப்பட்டது.

இதனையடுத்து, புதுச்சேரி மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி கவர்னர் மாளிகை எதிரில் நடைபெற்ற விழாவில், துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டர். புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமார் மற்றும் சந்திரபிரியங்கா ஆகியோரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ. நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் 5 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : New Jersey ,Governor ,Sauntarāja Raja , Puducherry, Cabinet, Inauguration
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது