×

மீன் பிடித்தபோது படகில் தீவிபத்து: நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநில பகுதியில் மீன் பிடித்தபோது படகில் தீவிபத்து ஏற்பட்டதால், நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த 15ம் தேதி முடிந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக மீனவர்கள் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 24ம் தேதி புது வண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கைலேஷ்குமார் தலைமையில் கேசவராவ், சரவணகுமார், துளசி, சிவாஜி, யுஜிராவ், லோகேஷ், யோகபெருமாள் உட்பட 9 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள், ஆந்திர மாநிலம் கிருணாம்பட்டினம் அருகே நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்றவைத்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்கள் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் 9 பேரும் கடலில் குதித்து தத்தளித்தனர். அதே பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த ஆந்திர மீனவர்கள் இதை பார்த்து, விரைந்து வந்து 9 பேரையும் மீட்டு கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. விரைவில் அவர்கள் சென்னை திரும்ப உள்ளனர்.

Tags : Mediterranean , Boat fire while fishing: 9 fishermen rescued in Mediterranean
× RELATED நடுக்கடலில் வீசிய தங்க கட்டிகளை தேடும் பணி தீவிரம்