கொரோனா தடுப்பு பணி, நீர் மேலாண்மைக்காக சென்னை மாநகராட்சிக்கு 2 விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சி மற்றும் நீர் மேலாண்மையில் சிறப்பாக  செயல்பட்டதற்காக சென்னை மாநகராட்சிக்கு  2 விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பணைகள் கட்டுதல், சொட்டு நீர் பாசன மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் கண்க்கீடு குறித்து ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விருதுகளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி நீர்நிலை சீரமைப்பில் சிறந்து விளங்குகிறது. அதன்படி 210 குளங்களை தூர்வாரி, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது குறைக்கப்பட்டது. மேலும் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது.

எனவே, நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சென்னை மாநகராட்சிக்கு நீர்நிலை தூர்வாருவதற்கான செயலாக்க திட்ட விருது வழங்கியுள்ளது. இதேபோல், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வந்த நிலையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும்  அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் தான்  பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை  மேற்கொண்டு பாதிப்புகளை  கட்டுப்படுத்தியது. அதற்காக கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சிகளை செயல்படுத்தியதற்கான விருதையும் சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பான செயல்பாட்டிற்காக சென்னை மாநகராட்சி 2 விருதுகளை  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>